விளிம்பினும் விளிம்பின் குரல்கள்!
உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளாக அமர வகைசெய்யும் சட்டத்தினைப் பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று 21.ஜூன்.2025 அன்று வள்ளுவர்க் கோட்டத்தில் நன்றி அறிவிப்பு விழா நடத்திச் சிறப்பித்திருக்கிறார்கள். விழாவில் பங்கேற்றுத் தனது ஏற்புரையினை வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தான் பிறப்பித்துள்ள அரசாணை குறித்துப் பேசியதோடு, தமிழகத்தின் திராவிட மாடல் அரசு எப்போதும் விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபடும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.
மேற்கண்ட சட்டமானது, அதிகாரத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை உறுதிசெய்வதற்கான முதலும் முக்கியமான நகர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதன்மூலம், ஏறத்தாழ 15000 மாற்றுத்திறனாளிகள் அரசியல்ப்படுத்தப்படுவார்கள். இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியான நடைமுறைசார் அமலாக்கங்கள், மாற்றுத்திறனாளிகளிடையே பல்வேறு வகையான உரையாடல்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தும். தொடர் உரையாடல்கள் வாயிலாகத் திரளும் கருத்தாக்கங்கள் இச்சட்டத்தை மேலும் மெருகேற்றிட உதவும். படிப்படியான இத்தகைய ஜனநாயக செயல்பாடுகள் வழியே மாற்றுத்திறனாளிகளின் அரசியல்ப் பங்கேற்பு மேலும் கூர்மைப்படும். எனவே, உள நெகிழ்வும், உண்மைப் பூரிப்புமாய் மாற்றுத்திறனாளிகளாகிய நாம் தமிழக முதல்வருக்கு நன்றி சொல்கிறோம், நன்மொழி சாற்றுகிறோம். அதற்கான களத்தை உருவாக்கி ஒருங்கிணைத்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
திராவிட மாடல் அரசு, விளிம்புநிலை மக்களோடு கைகோர்த்து அவர்களின் வளர்ச்சிக்காய் பாடுபடும் என தமிழக முதல்வர் பேசியிருப்பது வரவேற்புக்குரியது. அதேசமயம், விளிம்புக்குள்ளும் விளிம்பென உழலும் சில தரப்பின் குரல்கள் மட்டும் முதல்வரின் கவனத்தை எட்டுவதில்லையே ஏன்?
கருணையிலிருந்து உரிமை நோக்கி நகரும் இந்த யுகத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தரமான கல்வி, தகுதிக்கேற்ற பணிவாய்ப்பு குறித்து ஏன் ஆளும் அரசுகள் பேசுவதே இல்லை. கல்வியென்றால், உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குவதோடு நின்றுகொள்பவர்கள், தரமான கற்றல் சூழல், சிறப்பு கவனத்துடன் வடிவமைக்கப்பட வேண்டிய பள்ளி வளாகங்கள், அவற்றை சீரிய முறையில் கட்டமைத்திட ஏதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்த கல்விக்கொள்கை குறித்தெல்லாம் ஆள்வோர் பேசியதுண்டா?
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வலியுறுத்திய பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் என்ற சொல்லுக்கு முழு மனதுடன் செயல்வடிவம் கொடுத்ததுண்டா? அத்தகைய காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் நிரப்புவோம், என அன்றைக்கும் இன்றைக்கும் அரசாணைகள் வெளியிட்டீர்கள். அமலாக்கம் எப்போது?
“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவேதனை அடைந்துவிடக்கூடாது” எனத் தமிழக முதல்வர் சொல்லும்போதெல்லாம், நெஞ்சுக்குள் ஒரு நிம்மதி பிறக்கும், ஆறுதல் தேடும் பல மனங்களுக்கு சிறு ஆசுவாசம் கிடைக்கும். ஆனால், ஒருவர் அல்ல, கடந்த ஆண்டின் பிப்பரவரி மாதத்தில் ஆயிரக்கணக்கான பார்வையற்றோர், தங்கள் பணிவாய்ப்பு உரிமை வேண்டி, மனவருத்தம் அடைந்து, வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஒன்றல்ல இரண்டல்ல, 16 நாட்கள் அவர்களுள் நாள்வர் உண்ணா நோன்பு இருந்தார்கள். முன்வைத்த கோரிக்கைகள் அத்தனையும் உரிமைகள் சார்ந்தவை, வாழ்வாதாரம் சார்ந்தவை, சுயமரியாதையுடன் பொதுச்சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணையும் உள்ளார்ந்த விருப்பத்தை அடிநாதமாகக்கொண்டவை.
அவர்களின் போராட்டத்தை எப்படியேனும் இருட்டடிப்பு செய்வதில் முனைப்பு காட்டப்பட்டது. இத்தனைக்கும் தங்களால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20க்கு உயிர்கொடுங்கள் என்றுதான் கேட்டார்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வு (Special Drive) என்கிற அறிவிப்பு, அடுத்த இரண்டே மாதங்களில் அரசாணை எண் 20ஆக பரிணமித்தும் பயனில்லை.
பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் கண்டறிதல், காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம், நான்கு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு ஓராண்டில் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வு என அரசாணையில் இடம்பெற்றிருந்த அத்தனை அம்சங்களும் பார்வையற்றோர் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமும் புதுத் தெம்பையும் உத்வேகத்தையும் புதிய நம்பிக்கைகளையும் தோற்றுவித்தன. அரசாணை வெளிவந்தது, அமலாக்கங்கள்? இதுகுறித்துப் பல்வேறு முறை வலியுறுத்தியும் அதிகாரிகள் எவரிடமும் எதற்கும் பதில் இல்லை என்று அறிந்தபிறகுதான் பார்வையற்றோர் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அவர்களின் கோரிக்கைகள் இருக்கட்டும், “எங்கள் அமைச்சரை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம்” என அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த ஒன்றையேனும் நிறைவேற்றியிரு்க்கலாமே!
போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் அவர்கள், ஜூலை 2024 வாக்கில் அதாவது அடுத்த இரண்டு மாதங்களில் சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வு நடத்தப்படும் என்றார். ஆனால் இன்றுவரை எதுவும் நடக்கவில்லை.
நேற்றைய நன்றி அறிவித்தல் விழாவில்கூட, இதுபற்றி ஒருவரும் பேசவில்லை. தரமான கல்வியும், உரிய பணிவாய்ப்பும்தான் நலிவுற்றிருக்கும் எந்த ஒரு சமூகத்துக்கும் மீட்சியாக அமையும். ஆனால், உரிமை உரிமை என்று மணிக்கணக்கில் முழங்குபவர்கள், இந்த இரு விடயங்களைப் பேசுவதிலிருந்து ஏன் பின்வாங்குகிறார்கள் எனப் புரியவில்லை. ஒருவேளை இதன் பலன் உடனுக்குடன் அன்றி சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரியவரும் என்பதாலா?
ஊனமுற்றோருக்கான சட்டம் 1995, ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 இந்த இரண்டு சட்டங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் எங்களுக்கான இட ஒதுக்கீடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றமே சொல்லிய பின்னும், பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கண்டறிவதில் அரசு காட்டும் மெத்தனமும் மேம்போக்கு மனநிலையும் வருத்தத்தை அளிக்கிறது. இறுதியாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்த் தகுதித்தேர்வு நடத்தப்பட்டதோடு சரி. பத்தாண்டுகள் ஆகியும், சிறப்புத் தேர்வுகளோ, சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கையோ இல்லை என்ற உண்மையைப் பேசாமல் கடக்க முடியவில்லை.
தமிழக அரசின் கீழ் மொத்தம் 12 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்றால், 12 ஆயிரம் பார்வையற்றவர்கள் அவர்களோடு பணிபுரிய வேண்டும். ஆனால் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டாலே அதிசயம்தான்.
பெற்ற கல்விக்கு உரிய பணிவாய்ப்பின்றி, இரயில்களிலும் கடைத்தெருக்களிலும் பார்வையற்றவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்க, இன்றைய தலைமுறைப் பார்வையற்றவர்களின் கல்வியோ அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சிறப்புப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. பொதுப்பள்ளிகளில் அவர்கள் கற்பதற்கான உகந்த சூழல் இல்லை. இதுபற்றியெல்லாம் பேசுபவர்கள் அரசுக்கு நெருக்கமானவர்களாக இல்லை. அரசுக்கு நெருக்கமானவர்கள் இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.
ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒரு புள்ளியில் குவிக்கப்படும் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ஒளிக்கும் அதே சமூகநீதிக் குரல்கள் மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் மட்டும் பொதுமைப்படுத்தலையே விரும்புகின்றன. உடல் ஊனம் என்பது, இயக்கக் குறைபாடு, மற்றும் புலன்சார் குறைபாடு (loco moto disabled and sensory disabled) என இரு கூறுகளாக இருக்க, அவர்களின் சிறப்புத் தேவைகளும் வேறுபட்டதாக இருக்க, அரசோ அனைவரையும் மாற்றுத்திறனாளி எனப் பொதுமைப்படுத்தி விளிப்பது, அவர்கள் ஒவ்வொருவரின் சிறப்புத் தேவையையும் கவனத்தில்கொள்வதிலிருந்து நழுவப் பார்க்கும் செயலன்றி வேறில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வின் உட்சபட்ச நோக்கம் என்பது, அவர்களும் பிறரைப்போல கண்ணியத்துடனும், தன்மான உணர்வுடனும் பொதுச்சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைந்து வாழ்தல் என்பதாகத்தான் இருக்க முடியும். அத்தகைய நோக்கத்தை மிக வலிமையோடும் நிலைத்தன்மையோடும் சாத்தியப்படுத்துபவை அவர்களுக்கான தரமான கல்வியும், உரிய பணிவாய்ப்பும்தான். ஆளும் அரசுகள் அவர்களுக்கான சம வாய்ப்பையும் சம பங்கேற்பையும் உறுதி செய்திட வேண்டும். அதுவே சமூகநீதி, சமத்துவ மாதிரி. அதுவரை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளிம்பினும் விளிம்பின் குரல்கள் வீரியமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். மேடைகளில் அல்ல, வீதிகளில்.voice of visually impaired வெளியிட்ட அறிக்கையினை அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் படிக்க
